Tuesday, February 10, 2009

எப்படி நுழைந்தாய்?! என்னுள்ளே?

எப்படி நுழைந்தாய்?! என்னுள்ளே?

நானறியாமல் என்னுள் வந்தாய்..!

நான் காண்கையில் எல்லாம் - ஒரு

பொருட்டாகவே மதிக்காத பார்வை..!

நான் பேசுகையில் எல்லாம் - லகுவாய்

தவிர்க்கும் விதமான பதில்கள்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

கல்லூரி சகாக்கள் சிலரிடம் சிற்சில

சண்டைகள் இடுவதும் சகஜமே..!

நான் சண்டை இட்டவர்களிடம் நீ

அடிக்கடி நான் இருக்கும்போதே பேசுவாய், வேண்டுமென்றே..!

நான் முகம்சுளிக்க விலகி நடப்பேன் திரும்பி பார்க்காமல்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

சிற்சில நேரம் உனக்கு கணினிக் கடிதங்கள் அனுப்பியதுண்டு..!

அவற்றை பெரிதுபடுத்தி நீ நடந்து கொண்டதாய் நான் அறிந்ததில்லை..!

அவற்றிற்கு நீ அழகாய் பதில் அனுப்பியதாய் ஞாபகமில்லை..!

 

சிற்சில நேரம் உன்னுடன் கணினிக் கதைப்புகள் நடத்தியதுண்டு..!

"ஆம்.. இல்லை.. அப்படியா?.. இருக்கலாம்.. சரி..பார்க்கலாம்" இவை மட்டுமே

நான் வரி வரியாய் அனுப்பிய அத்தனைக்கும் நீ தந்த பதில்கள்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

கடைசிநாள் கல்லூரியில்.. பிரிவை பரிமாறும் நாளாம்..!

உன்னோடு சேர்ந்தே இருந்ததில்லை.. பிறகு பிரிவுக்கென்ன வேலை?

இருந்தும் பிரிவு வலித்தது..!

சொல்லாத காதல்.. சொல்லாமலே பிரிய முடிவெடுத்தேன்..!

இதுவரையில் என் நாட்குறிப்பில் நீ.. நினைவுகளில் நீ..!

உன் சரிதத்தில் நான் இருந்ததாய் எந்த அறிகுறியும் இருக்காதென்று..

நான் மெல்ல என்னை தேற்ற முயன்று.. தோற்று கொண்டிருந்தேன்..!

இதயம் அழுது நனைந்த தலையணைகள்.. நீ தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

உள்ளே குமுறி வெளியே சிரித்து வெடித்தேன்..!

"நல்ல நடிகன்" என்று என்னை தேற்றிகொண்டிருந்தேன்..!

சொல்லாத காதலின் அந்திய காலத்தில்.. வெளியில் அழுதால்.. அடுத்தவன் சிரிப்பானே! கதவுகள் அடைத்து, குரல் வலிக்க கதறினேன்..!

பிரிவில் நண்பர்கள் மும்மரமாய்.. என் சப்தம் கேட்க வாய்ப்பில்லை..!

 

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..எப்படி நீ நுழைந்தாய்?

 

மெல்ல சிணுங்கிய.. விடுதித் தொலைபேசி..எனக்கு துணைக்கு அழுதது..!

எதிர்பார்ப்புடன் எவனோ எடுத்து.. "வினோ..! ரூம் நம்பர் 83..! போன்.....!" உரக்க கூறிவிட்டு சட சட வென படிகளில் விரைந்தான்.!

 

முகத்தை துடைத்துக்கொண்டு..மாமூல் புன்னகையுடன்.. "எனக்கு யாரு போன் பண்றா?" கேட்டுக்கொண்டே விரைந்தேன். ரிசிவரை எடுத்தேன்.."ஹலோ?"

எதிர்முனையில் பதில் இல்லை.. ஆனால்.. இணைப்பு இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று கரகரத்தது..!

 

உள்ளே ஒரு சிணுங்கள்..! புரிந்தது யார் குரலென்று..! சிணுங்கள் அழுகையானது.

கலங்கினேன் நானும்..!

"பிரியா..!!" - தளுதளுக்க அழைத்தேன்.

 

"இப்ப கூட நீ சொல்ல மாட்டேல்ல?!"

கேட்ட தொனியில் அர்த்தம் புரிந்தது..!

 

"பிரியா..!!" - மீண்டும் ஒருமுறை..

 

"ஏன்டா மறைச்சிட்ட? நான் உன்னை பார்க்கனுன்டா" - எத்தனை ஏக்கமாய்.. அந்தக் குரல்.. தேம்பல்கள் மறைக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

..... பேச நா வராமல்.. மகிழத் தெரியாமல்.. வருந்துகையில் சிரித்த நான்.. மகிழ்வினில் அழுதேன்..! நான் அழுது பார்த்திராத நண்பர்கள், ஆயிரம் கேள்விகள் கேட்டனர்.

 

"பிரியா..! நீ..நீ நீயுமா...!"  - அவள் பெயரைத்தவிர அத்தனை வார்த்தையும் தடுமாறியது.

 

தேம்பல் தழுவ கேட்டாள் "எங்க ஹாஸ்டல் பக்கத்துல இருக்க கோயிலுக்கு.. இப்ப வரியா?"

 

"ம்ம்..!" - மனமின்றி ரிசிவரை வைத்தோம்..!எப்படி நுழைந்தாய்?!

 

நகர்ந்த நாட்கள் அத்தனையும் புதிதாய் மீண்டும் எனக்குள் ஓட ஆரம்பிக்க.. என் கால்களும் விரைந்தன.